ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான டூமாவுக்கு இடம்பெற்ற தேர்தலில் 14 கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் 64% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஐக்கிய ரஷ்யா கிட்டத்தட்ட 48% வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 21% வாக்குகள் பெற்றுள்ளது என்றும் மத்திய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது ஒரு உறுதியான வெற்றியாக இருந்தாலும், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, ஐக்கிய ரஷ்யாவிற்கு 54% வாக்குகள் கிடைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நாவல்னி உள்ளிட்ட எதிர்தரப்பினர் பெரிய அளவில் வாக்கு மோசடி இடமபெற்றுள்ளதாகவும் இந்த தேர்தல் ஒரு ஏமாற்று வேலை என்று ம் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷ்யாவின் தேர்தல்கள் ஆணைக்குழு, முறைகேடுகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளின் முடிவுகளை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என கூறப்படும் அதேவேளை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள், புடினின் யுனைட்டட் ரஷ்யா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன.