ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுத் தலைவர் விளாடிமிர் புடினை ஆதரிக்கும் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றிபெற்றுள்ளது.
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா நாடாளுமன்றத்துக்கு கடந்த 17ஆம் திகதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி, தற்போது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், ஐக்கிய ரஷ்யா கட்சி கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளைப் பெற்றது
ஐக்கிய ரஷ்யாவின் நெருங்கிய போட்டியாளரான கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய ரஷ்யா கட்சின் வெற்றி என்பது நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள 450 இடங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை எளிதில் தக்கவைத்துக் கொண்ட போதிலும், கட்சி சில இடங்களை இழந்தது. 2016இல், கட்சி 54 சதவீத வாக்குகளைப் பெற்றது.
நாடாளுமன்றத்தில் புடினின் முன்முயற்சிகளை பரவலாக ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகள், அவர்களின் ஆதரவு சுமார் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜெனடி ஜியுகனோவ், வாக்குப் பதிவு உட்பட விடயங்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டினார்.
எனினும், பரவலான முறைகேடுகள் குறித்த கூற்றை ரஷ்யாவின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இறுதி முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று ரஷ்யாவின் தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பம்ஃபிலோவா கூறினார்.
வெற்றியின் அளவானது, 450 இடங்கள் கொண்ட மாநில டுமா நாடாளுமன்றத்தில் ஐக்கிய ரஷ்யாவில் மூன்றில் இரண்டு பங்கு பிரதிநிதிகள் இருப்பார்கள். இது மற்ற கட்சிகளை நம்பாமல் சட்டங்களை தொடர்ந்து செயற்படுத்த உதவும்.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தமை குறிப்பிடத்தக்கது.