ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இதுதொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் இப்போது கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜோ பைடன் மற்றும் இம்மானுவேல் மக்ரோன் நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து அரை மணி நேரம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்கள் அடுத்த மாத இறுதியில் ஐரோப்பாவில் சந்திப்பார்கள்.
இதன்போது, இதுகுறித்து விரிவாக பேசி சுமூகமான தீர்வு எட்டப்படுமென நம்பப்படுகின்றது.
முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்த நாடு உடனடியாக தூதர்களை பிரான்ஸ் திரும்பப்பெற்றது.
இருப்பினும், வொஷிங்டனுக்கான தூதர் இப்போது தனது பதவிக்கு திரும்புவார். கான்பெர்ராவுக்கான தூதர் இதைச் செய்வாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்தன.
இதன்போது முன்னதாக பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் மற்றும் அணு ஆயுத்தை ஏவும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க செய்திருந்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்தது.
37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்த இரத்து செய்யப்பட்டதால், இந்த கூட்டணி மீது பிரான்ஸ் கடும் கோபம் கொண்டுள்ளது.