கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் இலங்கை வசமே இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் முடிவெடுத்திருந்தன.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று(வியாழக்கிழமை) மாலை சந்தித்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.
அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
இச்சந்திப்பின்போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை எனவும், இதன்காரணமாக ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பங்காளிக்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.