துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து கவனம் செலுத்தி கௌரவ பிரதமர், இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இவ்வாறு பணித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள், அவ்வாறு விடுவிக்கப்படும் அத்தியவசிய உணவுப் பொருட்களை துரிதமாக சதொச மற்றும் அத்தியவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரிசி உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான பொறுப்பை வர்த்தக அமைச்சும், விவசாயத்துறை அதிகாரிகளும் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்று பணிப்பாளர் தனது இராஜினாமை அறிவித்து முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு தான் முன்வைத்த முறைப்பாட்டை துரிதகதியில் விசாரிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் இதன்போது கௌரவ பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கமைய குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கௌரவ பிரதமர் அச்சந்தர்ப்பத்திலேயே பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தார்.
உள்ளூர் சோளப் பயிர் அறுவடை செய்யப்படும்வரை தற்போது நடைமுறையிலுள்ள முறையில் சர்வதேச சந்தையிலிருந்து சோளம் உள்ளிட்ட கால்நடை தீவன மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் முன்வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் கௌரவ அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, கலாநிதி பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பதிரன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஜானக வக்கும்புர, D.B.ஹேரத், நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல, வர்த்தக அமைச்சின் செயலாளர் சந்திரானி ஜயவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹல்ல, சுங்க பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜிம ரவிப்பிரிய, உணவு ஆணையாளர் நாயகம் ஜே.கிருஷ்ணமூர்த்தி, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆனந்த பீரிஸ் உள்ளிட்ட சில அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்கள் மற்றும் அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.