காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாமல் இழுத்தடித்து வருவது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது.
இந்த நிலை நீடித்தால், கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈரான் மீண்டும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். அதற்காக தயார் நிலையிலும் உள்ளோம். ஆனால், அந்தப் பேச்சுவர்த்தைக்குத் திரும்பப் போவதாக ஈரான் இதுவரை கூறவில்லை’ என கூறினார்.
ஈரானில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றதையடுத்து, புதிய அரசாங்கம் அமையும் வரை வியன்னா பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.