சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை கனடாவை விட்டு வெளியேறினார்.
இந்தநிலையில், சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,
‘அவர்கள் நம்பமுடியாத கடினமான சோதனையை சந்தித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்குச் செல்கிறார்கள் என்பது எங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
கடந்த 1,000 நாட்களாக, அவர்கள் வலிமை, விடாமுயற்சி, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றைக் காட்டியுள்ளனர்’ என கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூவை கனேடிய பொலிஸார் கைதுசெய்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறி, அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கனேடிய அரசாங்கம் பின்னர் விளக்கம் அளித்தது.
இதனால், ஆத்திரமடைந்த சீனா, இதற்குப் பழி வாங்கும் வகையில் அதே ஆண்டு கனடாவை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் வர்த்தகர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சீனாவில் கைதுசெய்தது.இவர்கள் உளவு பார்த்ததாக சீனா குற்றஞ்சாட்டியது.
மெங்கை கைது செய்ததற்கு பதிலடியாக, கனேடியர்களை சீனா தடுத்து வைத்திருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இதை சீனா கடுமையாக மறுத்தது.