அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், அணு ஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதமற்ற உலகம் என்ற இலக்கை அடைவதற்கு இந்தியா உறுதிப்பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பானது, பாகிஸ்தானுடனான சீனாவின் அணுசக்தி ஒத்துழைப்பு, அணுசக்தி விநியோக குழுவுடன் முரண்படும் வகையில் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.