பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் 150 இராணுவ லொறி ஓட்டுனர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 100,000க்கும் மேற்பட்ட லொறி ஓட்டுனர்கள் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சமீபத்திய மாதங்களில் உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல தொழில்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சில இடங்களில் எரிபொருள் தீர்ந்து பல எரிபொருள் நிலையங்களில் வரிசைகளை ஏற்படுத்த மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் வாங்குவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதால், பிரித்தானியாவில் லொறி ஓட்டுனர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், எரிபொருளை பொதுமக்கள் மொத்தமாக வாங்கியதால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து காலியாகின.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் போட்டி சட்டங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ள அரசாங்கம், எரிபொருள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து செயற்பட அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு லொரி ஓட்டுநர்கள் ஐந்தாயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.