இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெறப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை எதிர்மறையாக இருந்தால், அவர்கள் மீண்டும் விமான நிலையத்தில் சோதிக்கப்படாமல் சமூகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த திர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதேநேரம், முழுமையாக தடுப்பூசி பெறாத வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து தங்கள் ஹோட்டலுக்கு செல்ல முடியும் என்பதுடன், ஹோட்டலில் பிசிஆர் சோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிசிஆர் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பயணிகள் 12ஆவது நாளில் மீண்டும் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன்போதும் முடிவு எதிர்மறையாக இருந்தால் அவர்கள் சமூகத்துடன் இணைய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.