இந்தியா, சீனா இடையே எல்லை ஒப்பந்தம் இறுதியாகும் வரை இரு நாடுகளுக்கு இடையேயும் எல்லைப் பிரச்சினை நீடிக்கும் என இந்திய இராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏதாவது இருக்குமா என்று இந்திய இராணுவம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது. கடந்த காலங்களைப் போன்று எல்லையில் எந்த சவால் வந்தாலும் அதை மீண்டும் எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா, சீனா இடையே நீண்ட கால அடிப்படையில் எல்லை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும். அதுவரை இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கும். எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அனைத்து விதமான பயங்கரவாதச் சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய இராணுவம் தயார் நிலையில், உள்ளது. பயங்கரவாத ஊடுருவல், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றை முறியடிப்பதற்கு ஜம்மு-காஷ்மீரில் வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.