நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் தளர்த்தப்பட்டதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் மலையகத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்று முன்னெடுத்தன.
அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளை ஆரம்பிக்கும்போது சமூக இடைவெளி, ஆளணி பலம் ஆகிய நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நடைமுறை பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் நீக்கப்பட்டிருந்தாலும், குறித்த இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் பேருந்துகளின் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்களும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இவ்வாறு ஏனைய மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பியுள்ளதாக அங்குள்ள எங்களது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.