தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல் என விபரிக்கப்படுகின்றது.
அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டுகள் தாங்கும் விமானம் உட்பட பல போர் விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரண்டு முறை நுழைந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தாய்வான், அதன் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியது.
சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது.
தாய்வான், தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான பணிகள் குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக புகார் அளித்து வருகிறது.
இதுகுறித்து தாய்வான் பிரதமர் சு செங்-சாங் கூறுகையில், ‘சீனா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. இது பிராந்திய அமைதியை சேதப்படுத்தும்’ என கூறினார்.
பெய்ஜிங்கில் உள்ள அரசாங்கம் – சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 72 ஆண்டுகள் நிறைவடைகிறது – இதுவரை பொதுக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை, அதே பகுதியில் 13 பி.எல்.எ விமானங்கள் இரண்டாவது முறையாக தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே நீரின் மேல் பறந்தது.