கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அனைத்துலக சிறுவர் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் ஐநா அலுவலகத்திற்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலருடைய ஒளிப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் ஐநா அலுவலகத்தின் வாசலில் நின்றார்கள். சிறுவர் தினம் எனப்படுவது ஒரு கருப்புநாள் என்று அவர் தெரிவித்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவரும் ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக முடக்கம் நீக்கப்பட்ட அன்றைய தினமே ஐநா அலுவலகத்துக்கு முன்பு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
2009க்கு பின்னரான தமிழ் மக்களின் போராட்டப் பரப்புக்கள் என்று பார்த்தால் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மிகச் சில உறவினர்கள்தான். தமிழ் கட்சித் தலைவர்கள் அடிக்கடி தங்கள் அறிக்கைகளிலும் பேட்டிகளிலும் போராட்டம் போராட்டம் என்று கூறிக் கொள்கிறார்கள்.ஆனால் யாருமே தொடர்ச்சியாக போராடுவதாகத் தெரியவில்லை. அவ்வாறு போராடத் தேவையான மக்கள் கட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள்தான். தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் போராட்டம் என்ற அந்த வார்த்தைக்கு ஒரு கொஞ்சமாவது உயிரைக் கொடுத்துக் கொண்டிருப்பது தெருவோரங்களில் மக்கள் மயப்படாது பொராடிக்கொண்டிருக்கும் மிகச்சில பெற்றோர்தான்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆண்டுக்கணக்காக அவர்கள் மழைக்குள்ளும் வெயிலுக்குள்ளும் தெருவோரங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் எண்பதுக்கும் அதிகமானவர்கள் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையோடு இறந்துபோய் விட்டார்கள்.
அவர்களுக்கிடையே ஐக்கியம் இல்லை. அவர்களைப் பின்னிருந்து இயக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அல்லது கட்சிகள் அல்லது நபர்கள் இந்த அமைப்புக்கள் ஐக்கியப்படுவதை விரும்பவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அவர்களுடைய போராட்டம் அவர்களுடைய சொந்த மக்களாலேயே கவனிக்கப்படாத ஒன்றாக மாறிவிட்டது. எனினும் இந்த எல்லாக் குறைகளுக்கும் அப்பால் தமிழ்ப் பரப்பில் போராட்டம் என்ற வார்த்தைக்கு ஏதோ ஒரு அர்த்தத்தை கொடுப்பது அந்த முதிய பெற்றோர்தான்.
எனவே மிக நீண்டதும் அடுத்த கட்டத்துக்கு எழுச்சி பெறாததுமாகிய இப்போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் சிந்திப்பது தெரிகிறது. அவ்வாறு சிந்திக்கத் தேவையான ஒரு வரலாற்று முன்னுதாரணம் இலங்கை தீவில் ஏற்கனவே உண்டு. ஜே.வி.பியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட அனேகமாக எல்லாருடைய கதைகளையும் இலங்கைத்தீவு எப்பொழுதோ மறந்து போய்விட்டது.இப்பொழுது தமிழ்க் கதைகளையும் எப்படி மறக்கச் செய்யலாம் என்று சிந்திக்கப்படுகிறது. அதாவது கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை காணாமல் ஆக்குவது.
இந்த அரசியல் இலக்கை முன்வைத்து அரசாங்கம் கடந்த 20மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தை அல்லது விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய பாதையை ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருக்கிறார். அவருடைய நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அந்த அலுவலகத்தை மேற்கத்திய தூதரகங்களும், மனித உரிமை அமைப்புகளும், ஐநாவும் கவனத்தில் எடுத்து கருத்து கூறுவதை காணமுடிகிறது.
இதுபோலவே நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட மற்றொரு அலுவலகமான இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்தை இப்போதுள்ள அரசாங்கம் தொடர்ந்தும் இயங்க அனுமதித்தது. குறிப்பாக கடந்த பட்ஜெட்டின்போது அந்த அலுவலகத்துக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகரித்த நிதி எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது என்பதனை காட்டும் புள்ளிவிபர அறிக்கை ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் அனுப்பி வைத்தது. ஐநா அந்தப் புள்ளிவிவரங்களை கவனத்தில் எடுப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல அவசரஅவசரமாக ஐநா கூட்டத்தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்பு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தையும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் தன்னுடைய வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் அமெரிக்காவில் வைத்து ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என்று ஐநா பொதுச் செயலரிடம் தெரிவித்திருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் உபாயம் எனப்படுவது ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க வகுத்துக் கொடுத்த ஒன்றுதான். காணாமல் போனவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்று முதலில் கூறியவரும் அவர்தான்.அவர் பிரதமராகப் பதவியேற்ற பின் வந்த ஒரு பொங்கல் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் வைத்து அந்த அமங்கல செய்தியை தமிழ் மக்களுக்கு கூறினார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட ஒரு தொகுதியினர் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசிப்பதாகவும் ரணில் கூறினார். அதைப் பல்வேறு சிங்கள அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட யாருமே உயிரோடு இல்லை என்று கூறினால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு பதில் கூற அதாவது பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை. அவர் பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதில் தான் குறியாக இருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் மரணச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை முதலில் தொடங்கியதும் அவர்தான். ஆனால் நிலைமாறுகால நீதியின் கீழ் அவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்க முடியாது என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் மனித உரிமைவாதிகளும் முன்வைத்தார்கள். அவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்குவதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த சில நகர்வுகளை பாதிக்கப்பட்ட மக்களும் குடிமக்கள் சமூகங்களும் கடுமையாக எதிர்த்து நிராகரித்தன. இப்பொழுது அதே திட்டத்தை கோத்தாபய கையில் எடுத்திருக்கிறார்.
அதன்படி காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஐநா பொதுச் செயலருக்கு கூறியிருக்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது மரணச் சான்றிதழை அல்ல. அவர்கள் கேட்பது காணாமல் போனமைக்கான சான்றிதழைத் தான். மரணச் சான்றிதழும் காணாமல் போனமைக்காண சான்றிதழும் ஒன்று அல்ல.காணாமல்போனவர்கள் இயற்கையாக மரணம் அடையவில்லை.அல்லது விபத்திலும் இறக்கவில்லை.அவர்கள் அரசியல் காரணங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள். எனவே அவர்களை காணாமல் ஆக்கிய அரசியலை வெளிப்படுத்தும் விதத்தில் அந்த சான்றிதழ் அமைய வேண்டும். அவ்வாறாயின் அது காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் ஆகத்தான் அமையலாம்.அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழை வழங்கினால்தான் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருகிறார்கள் என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அவ்வாறு காணாமல் ஆக்கியதை உத்தியோகபூர்வமாக ஏற்று கொண்டால் அதன்பின் காணாமலாக்கியவர்களை விசாரிக்க வேண்டியிருக்கும்.தண்டிக்க வேண்டியிருக்கும்.அப்பொழுதுதான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். இது முதலாவது.
இரண்டாவது, ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டால் அதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக அவர் காணாமல் ஆக்கப்படும் வரையிலும் ஒரு மாதத்துக்கு எவ்வளவு உழைத்திருப்பாரோ அந்த தொகை கணிக்கப்பட்டு அவர் காணாமல் ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வரையிலுமான இடைப்பட்ட காலகட்டத்தில் எத்தனை மாதங்கள் உள்ளனவோ அத்தனை மாதங்களுக்கும் அந்த தொகையை பெருக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதலில் வழங்கவேண்டும். அதன் பின் காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இதுதான் நிலைமாறுகால நீதியின் நான்கு அடிப்படைத் தூண்களில் ஒன்றாகிய இழப்பீட்டு நீதியின் பிரகாரம் சில நாடுகளில் முன்வைக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டமாகும்.
அரசாங்கம் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தை காட்டப்பார்க்கிறது.ஆனால் காணாமல் ஆக்கப்பட்டதற்கான சான்றிதழுக்கு பதிலாக மரணச் சான்றிதழை வழங்க முயற்சிக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது முதலாவதாக அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதனை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்பது.இரண்டாவதாக காணாமல் ஆகியவர்களை விசாரித்து உரிய நீதியை வழங்க வேண்டும் என்பது. மூன்றாவதாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது.ஆனால் இந்த மூன்றையும் நடைமுறைப்படுத்துவது என்றால் முதலில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஓர் அரசியல் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதை ஆவணப்படுத்த வேண்டும். ஆனால் அரசாங்கம் அதற்குத் தயாரில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டால் அது காணாமல் ஆக்கியவர்களை தண்டிப்பதில் போய்முடியும்.காணாமல் ஆக்கியவர்களை தண்டிப்பது என்பது அவ்வாறு காணாமல் ஆக்குவதற்கான அதிகாரத்தையும் உத்தரவுகளையும் வழங்கும் அரசியல் தீர்மானத்தை எடுத்த அப்போதிருந்த அரசியல் தலைவர்களையும் விசாரிப்பதுதான். அதற்கு இப்போதுள்ள அரசாங்கம் தயாரா ?