கிரிக்கெட் இரசிகர்களை கொண்டாட வைத்துக்கொண்டிருக்கும், கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடர் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
டுபாயில் நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 57 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி மூன்றாவது அணியாக அடுத்த சுற்றான பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதன்போது பஞ்சாப் அணியில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 57 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் கார்டன் மற்றும் சபாஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளென் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.
அடுத்ததாக டுபாயில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில்லியம்சன் 26 ஓட்டங்களையும் அப்துல் சமாட் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, சிவம் மாவி மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 116 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 57 ஓட்டங்களையும் நிதிஷ் ரணா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 10 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.