வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே, அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதியில், எல்லை தாண்டி அதிகாரிகள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான உறவைப் புதுப்பிக்கவும், கொரிய தீபகற்பத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய உடன்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என நம்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையிலான தொலைத்தொடர்பு வசதிகளை மீண்டும் தொடங்குவது குறித்து வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் கடந்த வாரம் விருப்பம் தெரிவித்திருந்ததோடு தென்கொரியா தனது இரட்டை நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
உறவைப் புதுப்பிக்க நினைக்கும் தென்கொரியாவின் விருப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெற வடகொரியா முயல்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் அண்மைக்காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்ததால் இரு நாடுகளுக்கான அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மற்றும் தொலைநகல் வசதியும் ஓராண்டாக செயற்படவில்லை.
இராணுவ அதிகாரிகள் இடையே எல்லையோர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும், மோதலைத் தவிர்க்கவும் இந்த வசதிகளை இரு நாடுகளும் பயன்படுத்தி வந்தன.