இராகலையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம், அனைவரையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாதமையினால், குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தில் ஐந்து வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவிலேயே இந்த கோர தீ விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தினால் தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகிய ஐவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், 55 வயதுடைய ஆர்.ராமையா, அவரின் மனைவியான 50 வயதுடைய முத்துலெட்சுமி, 35 வயதடைய இவர்களின் மகள் டிவனியா மற்றும் குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என உயிரிழந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மருமகனான 30 வயதுடைய ரவீந்திரன் என்பவர் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் இல்லாத நிலையில், அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், ஐந்து உயிர்களை பலியொடுத்த இந்த கோரமான தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.