ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில் அபாட் மசூதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்தபோது மசூதியில் 300க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்டவிதத்தில் ஐ.எஸ்.கே அமைப்பின் முத்திரைகள் அனைத்தும் தெரிகின்றன.
இந்த அமைப்புதான் ஒகஸ்ட் மாதம் உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் மோசமான தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியது.
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ். அமைப்பால் மேற்கொள்ளப்பட்டதாக இருக்குமானால், நாட்டின் வட பகுதியில் அவர்கள் மேற்கொண்ட பயங்கரமான விரிவாக்க நடவடிக்கையாக இது இருக்கும்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.