வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் கூட்டாகத் தீர்மானித்தனர்.
எனவே, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பிவைப்பதற்கான விழிப்பூட்டல்களை அந்தந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருவது எனவும் ஆளுநர்களினால் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 ஆரம்பப் பாடசாலைகள் ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சுக் கேட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, 6 மாதங்களாகப் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.