பிலிப்பைன்ஸை சேர்ந்த ஊடகவியலாளர் மரியா ரெஸாவும் ரஷ்ய ஊடகவியலாளர் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் நாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறையையும் மீறி, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக போராடி வருவதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிலாவில் பிறந்த மரியா ரெஸா சிறு வயதிலேயே அவரது தாயாருடன் அமெரிக்காவில் குடியேறினார். சி.என்.என், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவருக்கு, ஏற்கெனவே 2018ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான தங்கப் பேனா விருதும் இந்த ஆண்டில் யுனெஸ்கோவின் உலக ஊடக சுதந்திரப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
58 வயதான மரியா ரெஸா, பிலிப்பைன்ஸில் போதை மருத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஜனாதிபதி ரோட்ரிகோ நிகழ்த்திய படுகொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘ராப்ளர்’ என்ற செய்தி வலைதளத்தை கடந்த 2012ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
அதே போல், ரஷ்யாவில் நடுநிலையான ‘நோவயா கெஸட்டா’ நாளிதழை கடந்த 1993ஆம் ஆண்டில் தொடங்கியவரகளில் டிமித்ரி முராடோவும் ஒருவர். தற்போது அந்த நாட்டின் மிகவும் நடுநிலையான, அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நாளிதழாக நோவயா கெஸட்டா திகழ்கிறது.