இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்த பொழுது 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியா இவ்வாறு தெரிவிப்பது இதுதான் முதற்தடவை அல்ல.கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியா அதைத்தான் கூறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 12ஆண்டுகளில் ஜெனிவா கூட்டத்தொடரின் போதும் இந்தியாவின் நிலைப்பாடு அதுவாகத்தான் இருக்கிறது.மிகக்குறிப்பாக கடந்த ஜெனிவா தீர்மானத்தில் அது இணைக்கப்பட்டிருக்கிறது.அதாவது இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறது. அதை அனைத்துலக மயப்படுத்த முயற்சிக்கின்றது.
ஆனால் கடந்த 34 ஆண்டுகளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இலங்கைத்தீவின் அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.தமிழ் அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. னினும் இந்தியா 13வது திருத்தத்தைத்தான் ஒரே தீர்வாக முன்வைக்கின்றது.
இந்த இடத்தில் சில கேள்விகள் எழும். முதலாவது இந்தியா ஏன் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது? இரண்டாவது கேள்வி 13வது திருத்தம்தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றால் அதை முழுமையாக அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு என்ன ? மூன்றாவது கேள்வி, மிகக் குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளாக இது தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு என்ன ?இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகளை இனி பார்க்கலாம்.
13வது திருத்தம் என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைவு. இந்திய இலங்கை உடன்படிக்கை என்பது ஈழப் போராட்டத்தின் விளைவு. தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவாக இந்தியா இலங்கையோடு ஓர் உடன்படிக்கையை எழுதிக் கொண்டது. அது ஓர் அனைத்துலக உடன்படிக்கை. இரண்டு தலைவர்களுக்கு இடையிலான உடன்படிக்கை.அந்தக் உடன்படிக்கைக்குப் பின் இலங்கைத்தீவின் அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் உலக அரசியலிலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் அது இப்பொழுதும் செல்லுபடியாகும். குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் 99 ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்திருக்கிறது.கொழும்புக் கடலில் நாட்டின் இதயமான பகுதியில் சீனா கடலை நிரப்பி ஒரு சீனப் பட்டினத்தை நிர்மாணித்திருக்கிறது. இலங்கைத்தீவு முன்னெப்போதையும்விட அதிகரித்த அளவில் சீன மயப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் பின்னரும் இந்திய இலங்கை உடன்படிக்கை செல்லுபடியாகும் என்பதுதான் அதற்குள்ள முக்கியத்துவம் ஆகும். ஏனெனில் அது இரண்டு அரசு தலைவர்களுக்கு இடையிலான அனைத்து உலக அங்கீகாரம் பெற்ற ஒரு உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இந்தியா இலங்கை தீவின் மீது என்றென்றும் தலையிட முடியும். அந்த உடன்படிக்கையின் பின்னிணைப்பாக காணப்படும் கடிதங்களில் அதைக் காணலாம்.அக்கடிதங்களின்படி இலங்கைதீவை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதிக்கக்கூடாது என்றிருக்கிறது. இதைத்தான் அண்மையில் இலங்கைக்கு வந்து போன இந்திய வெளியுறவுச் செயலரிடம் ஜனாதிபதி ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.ஆனால் யதார்த்தம் அதுவல்ல. கடந்த சில தசாப்தங்களில் இலங்கைத் தீவு அதிகரித்த அளவில் சீனமயப்பட்டு விட்டது. இந்த பிராந்தியத்தின் வரலாற்றிலேயே இந்தியாவின் தெற்கு மூலையில் சீனர்கள் இவ்வளவு செறிவாக முன்னெப்போதும் காணப்படவில்லை.இலங்கைத் தீவுக்குள் இருந்து சீனாவை அகற்ற நாட்டுக்குள் இருக்கும் எந்த ஒரு சக்தியாலும் இனி முடியாது என்பதே இப்போதுள்ள இலங்கைத்தீவின் யதார்த்தமாகும்.
இது முழுக்க முழுக்க இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஒரு போக்கு.எனினும் இந்திய-இலங்கை உடன்படிக்கை இப்பொழுதும் செல்லுபடியாகக் கூடியது. ஏனெனில் அது அனைத்துலக அங்கீகாரத்தை பெற்ற இரண்டு தலைவர்களுக்கு இடையிலான உடன்படிக்கை.அதற்குப் பின் செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான உடன்படிக்கையும் சீனபட்டினத்துக்கான உடன்படிக்கையும் அடிப்படையில் வர்த்தக உடன்படிக்கைகள் என்ற பரிமாணத்தைத்தான் அதிகம் கொண்டிருக்கின்றன. அரசுத் தலைவர்களுக்கு இடையிலான உடன்படிக்கைகள் அல்ல.இவ்வாறு நடைமுறையில் பலவீனமடைந்திருக்கும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சி இருக்கும் ஒரே உறுப்பு 13-வது திருத்தம்தான். எனவே 13வது திருத்தத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்துவதன் மூலம் இந்தியா இலங்கை தீவின் மீதான தனது பிடியை வலியுறுத்த விரும்புகிறதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.
னெனில் 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக இந்தியா கருதினால் அதை முழுமையாக அமல்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து இருந்திருக்கவேண்டும்.2009ஆம் ஆண்டு வரையிலும் அதற்கு ஆயுதப்போராட்டம் தடையாக இருந்தது என்று ஒரு சாட்டை கூறலாம். ஆனால் 2009க்கு பின்னர் இலங்கைதீவில் அதற்கு தமிழ்த்தரப்பில் எதிர்ப்பு எதுவும் கிடையாது. கூட்டமைப்பு இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானது அல்ல.விக்னேஸ்வரனும் 13வது திருத்தத்தை ஒரு தொடக்கமாக ஏற்றுக் கொள்கிறார். கஜேந்திரகுமாரின் கட்சி 13 ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்திய-இலங்கை உடன்படிக்கையை அதன் உள்ளடக்கத்தை ஏற்றுக் கொள்கிறது. எனவே இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு ஒப்பீட்டளவில் தமிழ் தரப்பிலிருந்து அதிகரித்த எதிர்ப்பு கிடையாது.
இப்படிப் பார்த்தால் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிர்ப்பு என்பது சிங்கள தரப்பில்தான் இருக்கிறது.இப்போதுள்ள மாகாண சபைகளுக்கான அமைச்சர் மாகாணசபைகளை வெள்ளை யானை என்று வர்ணிப்பவர்.இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொரகொட மாகாணசபைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்.ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கான தனது விஜயத்தின் முடிவில் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் என்பவற்றை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். மொத்தத்தில் மாகாணசபைகளுக்கு எதிராக சிந்திக்கும் ஓர் அரசாங்கம்தான் தற்போது இலங்கைத்தீவில் உள்ளது.அவர்கள் மாகாணசபையை இந்திய ஆதிக்கத்தின் ஒரு விளைவாகவே பார்க்கிறார்கள்.
சிங்கள-பௌத்த சிந்தனையின்படி ஒற்றையாட்சிக்கு வெளியே சிந்திக்க முடியாது.சிங்கள-பௌத்த சிந்தனையும் ஒற்றையாட்சி தத்துவமும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்.பிரிக்கப்படமுடியாதவை.இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கும் மட்டும் உரியது என்று கருதும் ஒரு அரசியல் மனோ நிலையானது பல்லினத்தன்மைக்கு எதிரானது.எனவே அது மாகாண சபைகளுக்கும் எதிரானது.எனவே கடந்த 34 ஆண்டுகளாக மாகாண சபைகள் தேய்ந்துபோனமைக்கு சிங்களத் தரப்பே அதிகம் பொறுப்பு.அதேளவுக்கு இந்தியாவும் பொறுப்பு.ஏனெனில் மாகாணசபைகளின் பெற்றோரில் இந்தியாவும் ஒன்று.இந்திய-இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கையெழுத்திடவில்லை.இந்தியாதான் தமிழ் மக்களின் சார்பாக கையெழுத்திட்டது. இந்தியா இதுவிடயத்தில் அதன் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றுவதென்றல் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அதைச் செய்யவில்லை.
இப்பொழுது இந்தியா கூறுகிறது 13தான் தீர்வு என்று.ஆனால் 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதற்கு இந்தியா தயாரா?இந்தியா கேட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கொடுக்க மறுத்து 20 மாத கால இழுபறிக்குப் பின் மேற்கு முனையத்தை அதானி குழுமத்துக்கு கொடுத்த ஓர் அரசாங்கம் இந்தியா கேட்பதுபோல 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.
இவைதவிர கடந்த 12 ஆண்டுகால தமிழ் யதார்த்தம் ஒன்றையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். ஆயுதப் போராட்டமானது தனிநாடு தவிர வேறு எந்தத் தீர்வுக்கும் தயாராக இருக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை வெளித் தரப்புகள் முன்வைப்பது உண்டு.ஆனால் கடந்த 12ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இருந்து தனிநாடு அல்லாத கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து பல்வேறு முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவு.அரசியல் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு நூதனமான கட்டமைப்பே தமிழ் மக்கள் பேரவை.அக் கட்டமைப்பு யாப்புருவாக்க குழுவுக்கு ஒரு முன்மொழிவை வழங்கியது.அது ஒரு சமஸ்டி முன்மொழிவு. அதன்பின் விக்னேஸ்வரனின் தலைமையின்கீழ் வடமாகாணசபை ஒரு முன்மொழிவை வழங்கியது.அதுவும் சமஸ்டி முன்மொழிவு. அதன்பின் விக்னேஸ்வரன் தான் ஒரு கட்சியை தொடங்கியபின் ஒரு முன்மொழிவை வழங்கினார்.அது உச்சபட்ச கூட்டாட்சியை அதாவது ஆங்கிலத்தில் கூறினால் கொன்ஃபெடரேசனை கேட்கிறது. இவை தவிர தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட ஏனைய கட்சிகளும் யாப்புருவாக்க குழுவிற்கு முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.சிவில் சமூகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆகியனவும் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.கூட்டமைப்பும் ரணிலும் சேர்ந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இடைக்கால வரைபு வரை முன்னேறியிருந்தார்கள்.
எனவே தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அதிக தொகை தீர்வு முன்மொழிவுகள் வழங்கப்பட்ட ஒரு காலகட்டமாக கடந்த 12 ஆண்டுகளைக் குறிப்பிடலாம்.அதாவது தமிழ் மக்கள் தாங்கள் எதை கேட்கிறார்கள் என்பதனை மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள்.இம் முன்மொழிவுகளில் பிரதானமானவை 13ஆவது திருத்தத்தை தாண்டி செல்கின்றன.எனினும், இந்தியா 13ஐத் தாண்டத் தயாரில்லை. இந்தியாவோ அமெரிக்காவோ தங்கள் தங்கள் நோக்கி நிலைகளிலிருந்து தீர்வுகளை முன் வைக்கின்றன.பேரரசுகள் அப்படித்தான் செய்யும். அவை தங்களுடைய ராணுவப் பொருளாதார இலக்குகளை முன்வைத்தே சிந்திக்கும்.தமிழ் மக்களுக்காக தமிழ் மக்கள்தான் சிந்திக்கவேண்டும்.தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழ் மக்கள்தான் முன்வைக்கவேண்டும். வெளியரசுகள் தங்கள் தங்கள் நலன்களின் நோக்கு நிலையிலிருந்து தீர்வுகளை முன்வைக்கும். அது உலக யதார்த்தத்தின் பாற்பட்டது. பிராந்திய யதார்த்தத்தின் பாற்பட்டது. ஆனால் தமது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்க வேண்டியது தமிழ் மக்கள்தான். அதற்காக உழைக்க வேண்டியது தமிழ் மக்கள்தான். கொடுமை என்னவென்றால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் மக்கள் அதற்காக உழைக்கவில்லை என்பதுதான்.