சுதேச பொருளாதாரத்தை 70களிலேயே வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால், இன்று இலங்கை சர்வதேசத்திற்கு கடன் வழங்கும் நாடாக வளர்ச்சியடைந்திருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நினைவுதினத்தை முன்னிட்டு, இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று இலங்கையின் 70களில் இருந்த காலக்கட்டம் தொடர்பாக அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
அன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் சில பொருளாதார சிக்கல்கள் இருந்தமையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
சீனிக்காக, அரிசிக்காக மக்கள் வரிசையில் அன்று காந்திருந்தமை உண்மைதான்.
இருந்தாலும், அன்று அதனை எதிர்த்தவர்கள் கூட தற்போது அவ்வாறான சுதேத பொருளாதாரத் திட்டத்தை வரவேற்றுள்ளார்கள்.
நாம் அன்று குறைந்தது இரண்டு வருடங்களுக்கேனும் அந்த சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருந்தால், இன்று இலங்கையில் பொருளாதார சிக்கல் ஒன்றே ஏற்பட்டிருக்காது.
சர்வதேசத்திடமிருந்து கடன் வாங்கும் நாடாக அன்றி, சர்வதேச நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்கும்.
மக்கள் இன்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நாட்டை மீளவும் கட்டியெழுப்ப முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.