கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்ற வயதான குடிமக்கள் தொடர்பிலும் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆனால் உலகின் சில வளர்ந்த நாடுகள், முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக்குக்கு அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான யுனிசெப்பின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கையில் கொரோனா நிலைமை மிக உயர்ந்த அமைப்பு மற்றும் நிர்வாகத்துடன் நிர்வகிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
மேலும், தடுப்பூசியின் வெற்றியை இப்போது இலங்கை நிரூபித்துள்ளது எனவும் கிறிஸ்டியன் ஸ்கூக் குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் வெற்றிகரமான கொரோனா நிர்வாகம் குறித்து இலங்கை மேலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என அவர் கூறியுள்ளார்.