18- 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் இம்மாதம் 21 ஆம் திகதிமுதல் இந்தப் பணிகள் ஆரம்பமாகும் என சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்தவகையில், ஏனைய மாவட்டங்களிலுள்ள 18-19 வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.