கொரோனா தொற்றின் பின்னராக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள ஆரம்ப நிலைக் கல்விக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வானது இன்று உத்தியோகபூர்வமாக திருகோணமலை ஶ்ரீ சுமேதங்கர மகா வித்தியாலயம் மற்றும் மாதுமை அம்பாள் வித்தியாலயம் ஆகியவற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் தற்போதைய நிலைமைகளை பார்வையிட்ட ஆளுநர் அவர்களும் அரச அதிகாரிகளும் அதனை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நேக்கில் நேரில் சென்று பார்வையிட்டு சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏதுவான வகையில் பாடசாலைகளை சுத்தப்படுத்த அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஆளுநர் அவர்கள் மாணவர்களது சுகாராரத்தினை கருத்தில்கொண்டு அதற்கு தேவையான வழிவகைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதன்போது ஆரம்பக்கல்வி வகுப்புகளைக்கொண்ட பாடசாலைகளுக்கான உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் குறித்த பாடசாலையின் அதிபர்களுக்கு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன, திருகோணமலை நகரசபை தலைவர் ராஜனாயகம், பட்டணமும் சூழலும் பிரதேசசபை தவிசாளர் ரத்னாயக்க, மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.