இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே பரவியிருந்த டெல்டா பிளஸ் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, இந்த மாற்றங்களின் விளைவாக நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ, சுகாதார அதிகாரிகளின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் பெரும்பாலான மக்கள், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றதால், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதை நிறுத்திய பெரிய மக்கள்தொகை கொண்ட சில நாடுகளையும் டெல்டா பிளஸ் தாக்கியுள்ளது என்றும் இது இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கவலையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தடுப்பூசி போடப்பட்டவர்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் நீண்ட காலத்திற்கு மக்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பது போன்ற வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சில சுகாதார வல்லுநர்கள் காற்றோட்டம் இருப்பதால் வெளிப்புற கூட்டங்களை நடத்தலாம் என்று கூறினாலும் வெளிப்புற இடங்களிலும் மக்கள் வருகை குறைவாக இருக்க வேண்டும் என்று விளக்கினார்.
அரசாங்கம் பொருளாதாரத்தை இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், மருத்துவர்கள் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர். எனவே, இந்த வாழ்க்ககைக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.