பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் எதையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை. எனினும், பருவநிலை மாற்றம் ரஷ்யாவுக்கு முக்கியமானது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்
இதுகுறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக, புடின் கிளாஸ்கோவிற்கு பறக்க மாட்டார். இருப்பினும் காலநிலை மாற்றம் எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்று’ என்று கூறினார்.
உலகளாவிய தலைவர்கள் அடுத்த மாதம் கிளாஸ்கோவில் கூடி, அதிகரித்து வரும் உலக வெப்பநிலையை தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒருவரான ரஷ்யா, இந்த மாநாட்டில் பங்கேற்காதது உலகளாவிய முயற்சிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உச்சிமாநாட்டில் ரஷ்ய தரப்பு பிரதிநிதித்துவம் செய்யப்படும் என்று பெஸ்கோவ் கூறினார், ஆனால் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என கூறினார்.
ரஷ்யா தற்போது கார்பன் வெளியீட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்க நாடு போதுமானதாக இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புடினின் முடிவைப் பற்றி பொரிஸ் ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் இது மிகவும் முக்கியமான தருணம் என்பதால் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் முன்பு தலைவர்களை கடுமையாக ஊக்குவித்தார்’என்று கூறினார்.
120க்கும் மேற்பட்ட தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்ததாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு, எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் நடைபெறவுள்ளது.
2015இல் பரிஸில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த கூட்டம் மிகப்பெரிய காலநிலை மாநாட்டாக இருக்கும்.
மேலும் புவி வெப்பமடைதலை மெதுவாக்க உலகளாவிய உமிழ்வு இலக்குகளை அமைப்பதில் இது ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.