நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.
அதன்படி, மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வரையில் கல்வி கற்கும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகம் அளித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும் சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்ததாக அவர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.
மேலும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன் விசேட கடமையினை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பிரிவு வரையில் கல்வி கற்கும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகம் அளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 100 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணிதல், கை கழுதுவல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்தே தெளிவுபடுத்தப்படுவதுடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல வவுனியா மாவட்டத்திலும் பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சகல மாணவர்களும் சீருடை அணியாமல் சாதாரண சீருடையுடன் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் பாடசாலை வாயிலில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதாவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன
பாடசாலைக்கு வந்த மாணவர்களைக் கொண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.