ரி-20 உலகக்கிண்ண தொடரின் 15ஆவது லீக் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நய்ம் 62 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சமிக்க கருணாரத்ன, பினுர பொனார்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குறிப்பாக ரி-20 உலகக்கிண்ண வரலாற்றில், தனது பிறந்தநாளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பானுக ராஜபக்ஷ பதிவுசெய்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், நசும் அஹமட் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சய்பூதின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் தலா 5 சிக்ஸர்கள், பவுண்ரிகளை விளாசி ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.