ரி-20 உலகக்கிண்ண தொடரின் 16ஆவது லீக் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 57 ஓட்டங்களையும் ரிஷப்பந்த் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷயீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் சதாப் கான் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 152 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்போது மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் பாபர் அசாம் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதுவரை ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில்லை.
அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதில்லை. இந்த இரண்டு அபூர்வமான விடயங்களிலும் இப்போட்டியில் அரங்கேறியிருந்தமை இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.
1992ஆம் ஆண்டிலிருந்து இதுவரை உலகக்கிண்ண வரலாற்றில் இந்தியக் கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்ததே கிடையாது. ஆனால், தற்போது முதல்முறையாக இந்தியக் கிரிக்கெட் அணியை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி என மிக முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்த ஷயீன் ஷா அப்ரிடி தெரிவுசெய்யப்பட்டார்.