கொலம்பியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த டைரோ அன்டோனியோ உசுகா, கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக கொலம்பியா அறிவித்துள்ளது.
கொலம்பியாவின் விமானப்படை, இராணுவம், பொலிஸ்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் மூலம் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) கொலம்பியா – பனாமா நாட்டு எல்லைப் பகுதியான நெக்கோக்லி வனப்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டோனெயில் என பரவலாக அறியப்பட்ட 50 டைரோ அன்டோனியோ உசுகா, தற்போது அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா டைரோ உசுகாவுக்கு ஐந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தமைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வருகின்றது.
டைரோ 2003ஆம் முதல் 2014ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் டன் கொகைன் போதைப் பொருளை இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தனது இளம் வயதில், ஒட்டோனெயில், கொலம்பியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர், 1990ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிப் படைகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டன.
இதையடுத்து, அன்டோனியாவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஈடுபட்டது. தொடக்கத்தில், மிகச்சிறிய அளவிலான போதைப்பொருட்களை கைமாற்றி வந்த அன்டோனியா, ஒருகட்டத்தில் சர்வதேச அளவில் போதைப்பொருட்களை கடத்தும் அளவுக்கு சென்றார். ‘கல்ஃப் க்ளான்’ என அழைக்கப்படும் அவரது குழு 2005ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலாக உருவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அன்டோனியோவை கைது செய்யும் நடவடிக்கையில் கொலம்பியா அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டது. இதற்கு அமெரிக்க உளவுத்துறையும் உதவியது. அவரை பிடிப்பதற்காக சுமார் ஐந்தாயிரம் வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், உளவுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், 22 ஹெலிகொப்டர்களுடன் அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர்.