அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவித்துவரும் நிலையிலேயே அக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனைத் தெரியவித்தார்.
உரப்பிரச்சினை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் ஆகியன தொடர்பாக தாம் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும்படி ஒருசில தரப்பினர் வலியுறுத்திவருவதாகவும் கூறினார்.
கட்சி ஒருமனதாக தீர்மானித்தால் நாளையே பதவிகளை துறந்துவிட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த மஹிந்த அமரவீர, எனினும் அத்தகையதொரு முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் கைப்பாவையாக இருக்கும் சஜித் பிரேமதசாவை ஜனாதிபதி ஆக்க முடியுமா அல்லது தோல்வியடைந்த தலைவரான ரணிலை மீண்டும் பலப்படுத்துவதா என்ற பிரச்சினை காணப்படுவதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.