லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ஜப்னா கிங்ஸ் அணி, நடப்பு ஆண்டுக்கான தொடரில் இரு முக்கிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் டு பிளெஸிஸ் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வஹாப் ரியாஸ் ஆகியோர் ஜப்னா கிங்ஸ் அணிக்கு விளையாடவுள்ளனர். இதனை ஜப்னா கிங்ஸ் அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதில் டு பிளெஸிஸ், அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். ரி-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.
அந்த அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த டு பிளெஸிஸ், அந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது வீரராக இடம்பிடித்திருந்தார். அத்துடன் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த நிலையில் இருக்கும் டு பிளெஸிஸ், இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல வஹாப் ரியாஸ், தற்போது நடைபெற்று வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில், பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாவிட்டாலும் அவர் மிகவும் அனுபவமிக்க பந்து வீச்சாளராக உள்ளார்.
அத்துடன் வஹாப் ரியாஸ், எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்னமாக திகழுவார் என்பதிலும் சந்தேகமில்லை.
37 வயதான டு பிளெஸிஸ், 50 ரி-20 போட்டிகளில் ஆயிரத்து 528 ஓட்டங்களை குவித்துள்ளார். 199 ஓட்டங்கள் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 35.53 சராசரி ஆகும்.
36 வயதான வஹாப் ரியாஸ், 36 ரி-20 போட்டிகளில், 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை அவரது சிறந்த பந்துவீச்சாகும்.