மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பேரை உடனடியாக தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று (புதன்கிழமை) மாலை சென்று கொண்டிருந்த போது சவுக்கடி பாலத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முச்சக்கரவண்டியை செலுத்துச் சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி சாரதியிடம் போக்குவரத்து பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரமின்றி செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபோவதாகவும் அதனை செய்யாது அங்கிருந்து விடுவிக்க 10 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கோரியுள்ளனர்.
இதனையடுத்து 5 ஆயிரம் ரூபாதான் இருக்கின்றது என 5 ஆயிரம் ரூபாவை போக்குவரத்து பொலிசர் இலஞ்சமாக பெற்ற பின்னர் அவரை விடுவித்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னிடம் 5 ரூபா இலஞ்சமாக போக்குவரத்து பொலிசார் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்; தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் உடனடியாக பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவந்த 3 பொலிஸாரையும் உடன் அமுலுக்குவரும் வரையில் நேற்று புதன்கிழமை உடனடியாக கடமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.