நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக கொரோனா தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச்செல்வதற்கான இயலுமை தொடர்பாக உடன் கண்டறியவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க, கொரோனா சட்டதிட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதென்று சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரிகள், இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்த, அதிக அக்கறையுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் இலங்கையில் நடத்தப்படவுள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக, வெளிநாட்டு இரசிகர்கள் வருவதற்கான வாய்ப்பளித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் அவர்களை உயிர்க் குமிழிக்குள் வைத்திருந்து, தேவையான வசதிகளை வழங்க முடியுமென்றுசுகாதாரத் துறையினர் எடுத்துரைத்தனர்.