ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியை லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் விமர்சித்ததையடுத்து, லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், லெபனானில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்துள்ளது மற்றும் சவுதி அரேபியா தனது குடிமக்கள் லெபனானுக்கு செல்ல தடை விதித்தது.
பெய்ரூட்டில் உள்ள தனது தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைப்பதாகவும் சவுதி அரேபியா கூறியுள்ளது.
ஏமனில் சவுதி தலைமையிலான இராணுவப் பிரச்சாரம் குறித்து லெபனானின் தகவல் அமைச்சரின் கருத்துக்கள் இராச்சியத்தில் சீற்றத்தைத் தூண்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனான் அதிகாரிகள் உண்மைகளைப் புறக்கணித்ததாலும், அவர்கள் தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், லெபனான் குடியரசுடனான உறவுகளின் விளைவுகளுக்கு இராச்சியத்தின் அரசாங்கம் வருந்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜோர்ஜ் கோர்தாஹி, கடந்த ஒகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே தற்போது சவுதி அரேபியா அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ஆனால், கோர்தாஹியின் கருத்து லெபனான் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என லெபனான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
லெபனானின் பிரதமர், சவுதியின் இந்த முடிவுக்கு வருந்துவதாகவும் அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதே காரணத்திற்காக லெபனான் தூதரை இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பஹ்ரைன் இராச்சியம் உத்தரவிட்டதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி ஏழு ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. ஏமனில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக சவுதி அரேபியாவும் கிளர்ச்சியாளர்களும் சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.