ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் விடயத்தில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாக, பிரான்ஸிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு விவகாரத்தில், பிரான்ஸூடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசினர்.
ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ரோமில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, கடந்த மாதம் நிகழ்ந்த இராஜதந்திர பிளவை சரிசெய்ய இருவரும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மக்ரோனிடம் முறையாக மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், ‘நாங்கள் செய்தது குளறுபடி தான்’ என்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும், ‘உண்மையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டதாகத்தான் நான் கருதி வந்தேன்’ என கூறினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஊடகவியலாளர்களைச் சந்தித்த மக்ரோன், ‘நம்பிக்கை என்பது அன்பு போன்றது, அதை அறிவிப்பது நல்லது தான், ஆனால் அதற்கான ஆதாரம் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்’ என கூறினார்.
ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு அவுஸ்ரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது.
இதன்கீழ் நீர்முழ்கி தொடர்பான பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் வழங்க இருக்கின்றன.
முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் அவுஸ்ரேலியாவுக்குக் கிடைக்கவிருக்கின்றன.
பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டுடன் அவுஸ்ரேலியா ஒப்பந்தம் போட்டிருந்தது.
ஆக்கஸ் உடன்பாடு கையெழுத்தானதால், பிரான்ஸ் நாட்டுடனான உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டது. இதனால் பிரான்ஸுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவுஸ்ரேலிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கைவிட்டு போனது.