எத்தியோப்பியா – தைக்ரே மோதலில் அனைத்து தரப்புகளும் சர்வதேச மனித உரிமைகளை மீறியுள்ளன என்றும் அவற்றில் சில மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்றும் புதிய அறிக்கை கூறுகிறது.
எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி எத்தியோப்பிய பிரதமர், தைக்ரேயில் பிராந்திய படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்த உத்தரவிட்டதை அடுத்து யுத்தம் தொடங்கியது.
இதில் சர்வதேச மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டுள்ள நிலையில் போர்நிறுத்தத்திற்கு மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டவிரோத கொலைகள் மற்றும் நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள், சித்திரவதை அகதிகளுக்கு எதிரான மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, குடிமக்களின் கட்டாய இடப்பெயர்வு உள்ளிட்ட தொடர்ச்சியான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை அறிக்கை விவரிக்கிறது.
1,300 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் மேலும் பல சம்பவங்கள் குறித்து முறைப்பாடு வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2020 முதல் ஜூன் வரை ஆவணப்படுத்தப்பட்ட பெரும்பாலான மீறல்கள் எத்தியோப்பியன் மற்றும் எரித்திரியா படைகளால் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.