இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துவருகின்றன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் நாடு முழுமையாக நிலைகுலைந்து போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 130 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளது. அத்தோடு 2019 டிசம்பர் முதல் 2021 ஓகஸ்ட் வரை, இலங்கையின் பண விநியோகம் 2.8 டிரில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.
1.2 மில்லியன் அரச துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், ஓய்வூதியம் வழங்குவதற்கும் அதிகப் பணம் செலவிடப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு ஒரு டிரில்லியன் ரூபாய் செலவாகின்றது.
இருப்பினும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு பணத்தை அச்சிடுவதற்கான முடிவை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் ஆதரித்த அதேவேளை உயர் பணவீக்கம் கவலையளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இலங்கையின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு சுமார் 4 வீதத்தில் இருந்து சுமார் 7 வீதமாக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், அரசாங்க வருமானம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 9.6% ஆக இருந்தது, இது வரிக் குறைப்புகளுக்கு முன்னதாக 2019 இல் 12.6% ஆக இருந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.