ரி-20 உலகக்கிண்ண தொடரின் 36ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் நமீபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நமீபியா அணியின் பந்துவீச்சில், ஈராஸ்மஸ், வெய்ஸ் மற்றும் ஷால்ட்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நமீபியா அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மைக்கேல் வான் லிங்கன் 25 ஓட்டங்களையும் ஷேன் க்ரீன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 1 விக்கெட்டினையும் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜேம்ஸ் நீஷம் தெரிவுசெய்யப்பட்டார்.