மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதனை செய்யத்தவறினால் எமக்கு மாற்றுவழி ஒன்றை தேடிக்கொள்ள வேண்டிவரும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் தனித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதன் பின்னணி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு பின்னர் கடந்த வாரம் வரையும் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தடவையேனும் ஜனாதிபதியோ பிரதமராே தம்மை அழைத்து கலந்துரையாடியதில்லை என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
இருப்பினும் மக்களின் பிரச்சினை, நாட்டின் பொருளாதார பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் 11 பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவேண்டும் என்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல்களுக்கு எம்மையும் அழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.