ஈராக் பிரதமர் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கும் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஈரானின் இராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்ததையடுத்து நேற்று (திங்கட்கிழமை) ஈராக் வந்த ஈரானின் இராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி, ஈராக்கின் உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
இதன்போது, பிரதமர் மீதான கொலை முயற்சியில் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். ஈராக்கின் அடுத்த பிரதமராக ஷியா ஆயுதக் குழுவினர் பரிந்துரைக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஈரான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவர் கூறினார்.
மேலும், பிரதமர் அல்-காதிமி, ஜனாதிபதி பர்ஹம் சாலிஹ் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னதாக, ஈராக் பிரதமர் மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, காயமின்றி உயிர் தப்பினார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் காயமடைந்தனர்.
.