அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் சரியான தெரிவுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை முன்பாக இடம் பெற்றுள்ளது.
செட்டிகுளம் பிரதேசத்திற்குள் இடம்பெற்றுவரும் அநியாயங்களால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள். இதனை தட்டிக்கேட்கின்ற அதிகாரத்தினை கொண்டிருக்கும் தவிசாளர் கண்மூடித்தனமாக இருப்பதையிட்டு மனவேதனையடைகின்றோம். என சுதந்திரக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் யூட் தெரிவித்தார்.
குறிப்பாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பிழையான தெரிவுகள் இடம்பெற்றுள்ளது. மக்கள் குடியிருக்காத, காடுகள் வயல்களுக்கு செல்கின்ற வீதிகளை திருத்தப்பணிகளுக்காக தெரிவுசெய்திருக்கின்றார்கள்.
ஒரு குடும்பம், இரு குடும்பம் இருக்கின்ற வீதிகளையும் தெரிவுசெய்திருக்கின்றார்கள்.
அந்த வீதிகளை மாற்றி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதிகளை புணரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் தவிசாளரால் வழங்கப்படவில்லை. எனவே அவ் வீதிகளுக்கு பதிலாக மக்களால் கோரிக்கை விடுக்கப்படும் வீதியினை புணரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.