பெலாரஸ் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ரஷ்யாதான் மூலகாரணம் என போலந்து பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘பெலாரஸில் இருந்து போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் அலை அலையாகப் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் தூண்டுதலாக இருந்து வருகிறது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மையைக் குலைப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மூளையாக இருந்து செயற்படுகிறார். போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அகதிகளை அவர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்’ என கூறினார்.
இதனிடையே போலந்து – பெலாரஸ் எல்லையில் அகதிகளால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து விளாடிமீர் புடின், ஜேர்மனியின் அதிபர் மெர்க்கலுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறாத பெலராஸ், ரஷ்யாவுடன் மிக நெருங்கி நட்புறவை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கும் பெலாரஸிலிருந்து சட்டவிரோதமாக வர முயலும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி போலந்துக்குள் நுழைவதற்காக அந்த நாட்டு எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் பிற ஆசிய நாடுகளிலிருந்தும் வந்துள்ள அந்த அகதிகள், பெண்கள் குழந்தைகளுடன் கடும் குளிரில் ஆபத்தான நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.
போலந்துக்கள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்துள்ளது.