ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சஹ்ரானின் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
தான் ஆதாரங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாகவும் அவருடைய கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்தது பற்றி எந்த ஆவணங்களும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் அல்லது பாதுகாப்புப் படையினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.