குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்ததற்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மறைமுகமாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து புடின் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை பெலாரஸ் தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள்.
நான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை.
எரிவாயு குழாய்கள் பெலாரஸ் நாட்டின் வழியாகச் செல்வதால், அந்நாட்டின் ஜனாதிபதி என்கிற முறையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு உத்தரவிடலாம்.
ஆனால், அது எரிவாயு டிரான்சிட் ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும். அப்படி எதுவும் நடக்காது என நான் நம்புவேன்’ என கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறாத பெலராஸ், ரஷ்யாவுடன் மிக நெருங்கி நட்புறவை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கும் பெலாரஸிலிருந்து சட்டவிரோதமாக வர முயலும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி போலந்துக்குள் நுழைவதற்காக அந்த நாட்டு எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் பிற ஆசிய நாடுகளிலிருந்தும் வந்துள்ள அந்த அகதிகள், பெண்கள் குழந்தைகளுடன் கடும் குளிரில் ஆபத்தான நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.
போலந்துக்கள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்துள்ளது.