ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ரஷ்யா ஏவுகணை சோதனையை நடத்தியமைக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
ரஷ்யாவின் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றை வெடிக்கச் செய்யும் வகையில் குறித்த ஏவுகணை சோதனை அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பொறுப்பற்ற வகையில் இவ்வாறு அழிவுகரமான செயற்கைக்கோள் சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
இச்சோதனையினால் சுற்றுப்பாதையில் 1,500 க்கும் மேற்பட்ட குப்பைகள் இருப்பதாகவும் அந்த துகள்கள் அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க மற்றும் சர்வதேச நாடுகளின் விண்வெளி வீரர்களுக்கு மட்டும் அல்லாது அவர்களின் சொந்த விண்வெளி வீரர்களுக்கும் இது ஆபத்து விளைவிக்கும் என நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார்.