கடந்த இரு வாரங்களில் இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக போராடி வந்த இரண்டு தரப்புகள் குறிப்பிட்டு செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. முதலாவது இலங்கைத்தீவில் சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்களும் அதிபர்களும் முன்னெடுத்த ஒரு போராட்டம்.இப்போராட்டம் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒரு குழுவின் சமரச முயற்சிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அடுத்தது இந்தியாவில் புதுடில்லியில் மோடி அரசாங்கத்தின் 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல மாதங்களாகப் போராடி வந்த விவசாயிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசாங்கம் மேற்படி மூன்று மசோதாக்களை பின்னெடுத்திருக்கிறது. ஒரு பெரும் தொற்றுநோய் சூழலுக்குள் கடந்த இருவார காலப்பகுதியினுள் கிடைத்த இரு பெரும் வெற்றிகள் இவை எனலாம். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நோய்தொற்று சவால்களை எதிர்கொண்டு இழப்புக்களின் மத்தியிலும், அவமதிப்புகள் அச்சுறுத்தல்கள் பழிச் சொற்கள் என்பவற்றின் மத்தியிலும் தொடர்ச்சியாக சலிப்பின்றி முன்னெடுக்கப்பட்ட இந்த இரண்டு போராட்டங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் ஒரு பெரும் தொற்றுநோய் சூழலுக்குள் போராடிக் கொண்டிருக்கும் தரப்புக்க்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய இரண்டு திருப்பங்கள் ஆகும்.
covid-19 உலகை கவ்விப் பிடிக்க தொடங்கிய காலகட்டத்தில் ஹொங்கொங்கில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு பெரும் தொற்றுநோய் சூழலுக்குள் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு போராட்டமாக அதைக் குறிப்பிடலாம். சீனா அப்போராட்டத்தை ஒப்பீட்டளவில் முடக்கி விட்டது என்றே தோன்றுகிறது.
எனினும்,டெல்லி விவசாயிகளின் போராட்டமும் இலங்கைதீவில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் போராட்டமும் முன்னுதாரணம் மிக்க வெற்றிகளை பெற்றிருக்கின்றன.இது இலங்கைத்தீவில் அரசாங்கத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது. குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளாக தமது கூட்டு உரிமைகளுக்காகவும் நீதியை வேண்டியும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உற்சாகம் ஊட்ட கூடியது.
ஆனால் கடந்த திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடந்த ஒரு போராட்டம் அவ்வாறு நம்பிக்கை ஊட்டத்தக்க ஒன்று அல்ல. வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கம் திட்டமிட்டு இனப் பரம்பலை மாற்றுவதற்கு எதிராகவும், அரச திணைக்களங்களின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் அப்போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.கடந்த 12 ஆண்டுகளில் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகரித்த அளவில் நில அபகரிப்பு முயற்சிகள் அரசாங்கத்தின் வெவ்வேறு திணைக்களங்களிற்கூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக வவுனியா மாவட்டத்துக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இடையிலான இனரீதியான இணைப்பை துண்டிக்கும் விதத்தில் இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் இருக்கும் தமிழ்ப் பகுதிகளை சிங்கள நிர்வாக அலகுக்குள் உள்வாங்கும் முயற்சிகள் திட்டமிடப்படுகின்றன
இவ்வாறானதொரு பின்னணியில் நில அபகரிப்புக்கு எதிராகவும் திட்டமிட்டு இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால் தமிழ் கட்சிகள் குறைந்தபட்சம் அந்த விவகாரத்தை முன்வைத்தாவது ஒன்றிணைந்து அப்போராட்டத்தில் முன்னெடுக்கவில்லை என்பதைத்தான் அண்மைக்கால நிலைமைகள் நமக்கு காட்டுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே ஒரு போராட்டத்தை வவுனியா நகரில் முன்னெடுத்தது. அது ஒரு கவன ஈர்ப்பு போராட்டம். அதிகம் மக்கள் மயப்படாத ஒரு போராட்டம். அதன்பின் கடந்த திங்கட்கிழமை கூட்டமைப்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் அதில் கிட்டத்தட்ட 60 பேர்களே கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் பிரமுகர்களும் அவர்களுடைய தொண்டர்களும்தான் அதிகளவில் பங்குபற்றியிருக்கிறார்கள்.சமூக அமைப்புகளுக்கும் போதிய அளவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை மையமாகக் கொண்டு தமிழ் மரபுரிமைப் பேரவை என்ற ஒரு அமைப்பு செயற்பட்டு வந்தது. அந்த அமைப்பு தொடக்கப்பட்ட காலகட்டங்களில் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வரும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. சிவில் சமூக சந்திப்புகளிலும் அந்த அமைப்பு மிக தீவிரமான நிலைப்பாடுகளோடு காணப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களாக அந்த அமைப்பு காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் பேரவை போலவே தமிழ் மரபுரிமை பேரவையும் செயலற்ற ஒரு அமைப்பாக மாறி விட்டதா? அந்த அமைப்பைச் சேர்ந்த மதகுரு சொன்னார் நெடுங்கேணியில் நடந்த போராட்டம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று. ஆனால் அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருக்க வேண்டியது மரபுரிமைப்பேரவை தான். ஏனெனில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீரைக் கொடுத்து நிலத்தை பறிக்கும் முயற்சிக்கு எதிராக திட்டவட்டமான முடிவுகளோடும் தெளிவான இலக்குகளோடும் முன்வந்த ஒரு மக்கள் அமைப்பு அது. இவ்வாறு மக்கள் அமைப்புக்களுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அறிவிக்காமல் ஒரு போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுத்தது. அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அது ஒரு கவனயீர்ப்பு போராட்டம்தான். அப்பகுதியில் தீவிரமாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்குக்கூட அது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லையாம்
கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பெரும்பாலான போராட்டங்கள் அப்படித்தான் காணப்படுகின்றன. ஒன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆண்டுக்கணக்கில் போராடுகிறார்கள்.அல்லது காணி அபகரிப்புக்கு எதிராக காணிச் சொந்தக்காரர்களும் அரசியல்வாதிகளும் போராடுகிறார்கள்.சில சமயங்களில் அரசியல்வாதிகளோடு தொண்டர்களும் காணப்படுகிறார்கள்.ஆனால் பெரும்பாலான இப்போராட்டங்கள் மக்கள்மயப்படாதவை.டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்தை போல அவை மக்கள் மயயப்படவில்லை.
அதேசமயம் நெடுங்கேணி போராட்டம் நடந்த அடுத்த நாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அப்போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது. தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்னிறுத்தி போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் எல்லாவிதமான உபாயங்களையும் கையாண்டது. போலீசார் முன்கூட்டியே நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற எத்தனித்தார்கள்.வீதி மறிப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி வருவதை தடுத்தார்கள். எனினும் எல்லாவிதமான முறியடிப்பு முயற்சிகளையும் தாண்டி மக்கள் கொழும்பில் திரண்டார்கள்.கடந்த சில தசாப்தங்களில் எதிர்க்கட்சிகள் ஒழுங்குபடுத்திய மக்கள் எதிர்ப்புக்களோடு ஒப்பிடுகையில் கடந்த செவ்வாய்க்கிழமை திரண்ட மக்களின் தொகை போதாது என்பதனை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் தடைகளைத் தாண்டி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் என்ற அடிப்படையில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
இந்த மாதம் 18ஆம் திகதியோடு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளும் அவரை ஒரு வெற்றி பெற்ற தலைவராக நிரூபிக்கத் தவறியிருக்கின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அதன் பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளி வழங்கிய மக்கள் இப்பொழுது அதிருப்தியோடும் விரக்தியோடும் கோபத்தோடும் காணப்படுகிறார்கள். ஆனால் அந்தக் கூட்டுக் கோபத்தை திரட்டியெடுக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எதிர்க்கட்சிகளும் ஒரு திரட்சியாக இல்லை.
அரசாங்கத்தை தோற்கடிப்பது என்று சொன்னால் அதைத் தனிய சிங்கள எதிர்க்கட்சிகள் மட்டும் சாதிக்க முடியாது. மூன்று இனத்தவர்களையும் இணைத்தால்தான் அது சாத்தியமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு அது நிரூபிக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு மூன்று இனத்தவர்களையும் ஒருங்கிணைக்க வல்ல தலைவராக சஜித் எழுச்சி பெறவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓரளவுக்காயினும் அந்த முகம் இருந்தது. ஆனால் சஜித் கோத்தாவுக்கு எதிராக துலக்கமான லிபரல் ஜனநாயக முகத்தை முன்வைக்க முடியாமல் இருக்கிறார்.ஏனெனில் அவரும் இனவாதத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறார். தவிர அவருடைய சொந்த கட்சிக்குள்ளேயே சாதி அவருக்கு ஒரு பிரச்சினை. இவ்வாறு எதிர்க்கட்சிகள் தமிழ் முஸ்லிம் மக்களைத் திரட்டி ஒரு கூட்டு எதிர்ப்பை தொடர்ச்சியாக காட்டும் போதுதான் தென்னிலங்கை அரசியலில் திருப்பகரமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ஆனால் திங்கட்கிழமை தமிழ்அரசியல்வாதிகள் நெடுங்கேணியில் தமது சொந்த மக்களின் கவனத்தையே ஈர்க்காத ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். செவ்வாய்க்கிழமை கொழும்பில் எதிர்கட்சிகள் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தன. அதாவது அரசாங்கத்துக்கு எதிராக மூன்று இனங்களும் ஓரணியில் திரளவில்லை என்று பொருள்.