நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் மீளப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அத்தோடு, குளிர்கால கூட்டத்தொடரில் இவை நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையிலேயே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.