ஜெருசலேம் பழைய நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் நடக்கும் கிழக்கு ஜெருசலேம் எல்லைச் சுவர் ஒன்றுக்கான நுழைவாயிலில் இந்த தாக்குதல் நடந்தது.
இப்பகுதியில் தான் அல்-அக்சா மசூதி அமைந்துள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதே வளாகத்தில் யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் எனும் யூத வழிபாட்டுத் தலமும் அமைந்துள்ளது.
ஃபாதி அபு ஷ்காய்தாம் என்று இஸ்ரேல் மற்றும் பாலத்தீன ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படும் இந்த நபர் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் தீவிரமான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒமர் பர்-லேவ் கூறுகையில், ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல். இது 32 அல்லது 36 நொடிகள் மட்டுமே நடந்தது. தம்மை ஒரு பழமைவாத யூதர் போல காட்டிக் கொண்ட அந்த நபர் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டார்’ என கூறினார்.